☰
×

குவியும் வாழ்த்துக்கள்..!! 100வது கிராண்ட் மாஸ்டரானார் அனுஜ் ஸ்ரீவத்ரி!

 

இந்தியாவின் 100வது கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்று சாதனை படைத்துள்ளார் மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளம் வீரர் அனுஜ் ஸ்ரீவத்ரி.

7வது ஆசியான் பிளஸ் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அபாரமாக விளையாடிய அனுஜ் ஸ்ரீவத்ரி சாம்பியன் பட்டம் வென்றார். மேலும், சர்வதேச கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தையும் உறுதி செய்து, இந்தியாவிற்கு 100வது கிராண்ட்மாஸ்டர் என்ற வரலாற்று மைல்கல்லைப் பெற்றுத் தந்துள்ளார்.

1988ல், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், செஸ் உலகின் உச்சத்தை எட்டி புதிய பாதை அமைத்துக் கொடுத்தார். ஆனந்த் கிராண்ட்மாஸ்டராகி 38 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது கிராண்ட்மாஸ்டர் எண்ணிக்கையில் இந்தியா 'சதம்' அடித்து உலகை வியக்க வைத்துள்ளது.

இதுகுறித்து 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் கூறியதாவது: இது உண்மையிலேயே பிரமிக்கத்தக்க வரலாற்று மைல்கல். கிராண்ட்மாஸ்டர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ள வேகம் மிகப்பெரிய விஷயம். 2022 சென்னை செஸ் ஒலிம்பியாட்டின் போது, நம் நாடு 75வது ஆண்டைக் கொண்டாடியதால், 75 கிராண்ட்மாஸ்டர்கள் வந்தால் சிறப்பாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், நான்கே ஆண்டுகளில் நாம் 100ஐ எட்டியுள்ளோம். இதை நினைத்துப் பார்க்கும்போது மிகுந்த திருப்தியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இவ்வாறு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.