தீபாவளியன்று நேர்ந்த சோகம்! பணியில் இருந்த நடத்துனர் மாரடைப்பால் மரணம்
அரசு பேருந்தில் பணியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு நடத்துனர் உயிரிழந்த சம்பவம் ஈரோட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நல்லாமுப்பனூர் என்ற இடத்தில் கவுந்தப்பாடியில் இருந்து அந்தியூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தில், அதன் நடத்துனர் கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்த செல்வன் (52) என்பவர் பேருந்து வந்துகொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து பொதுமக்கள் சத்தமிட்டதை அடுத்து பேருந்தை ஓட்டுநர் ஓரமாக நிறுத்தியுள்ளார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துவிட்டு பேருந்தை அந்தியூர் நோக்கி ஓட்டுனர் ஓட்டி வந்துள்ளார்.
தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடனடியாக சென்று எதிரில் வந்தபோது பேருந்தை நிறுத்தி பேருந்தில் ஏறி நடத்துனரை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து உயிரிழந்த நடத்துனரின் உடல் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி திருநாளில் பணியில் இருந்து அரசு பேருந்து நடத்துனர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.