சென்னையில் ரூ.1 லட்சத்திற்கு ஆணுறை; ரூ.4 லட்சத்திற்கு நூடுல்ஸ் - ஸ்விக்கியை அதிரவைத்த 2025 ஆர்டர்கள்..!
ஸ்விக்கியின் ஆன்லைன் வர்த்தக தளமான இன்ஸ்டாமார்ட், 2025-ஆம் ஆண்டுக்கான தனது அதிரடி அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வாடிக்கையாளர்களின் ஷாப்பிங் பழக்கவழக்கங்கள் ஆடம்பரமும் விசித்திரமும் கலந்த ஒரு கலவையாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஹைதராபாத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ஒரே நேரத்தில் ரூ.4.3 லட்சம் செலவில் 3 ஐபோன் 17-களை ஆர்டர் செய்து அதிரடி காட்டியுள்ளார். அதேபோல், தொழில்நுட்பப் பொருட்களுக்காக நொய்டாவைச் சேர்ந்த நிறுவனம் ரூ.2.69 லட்சம் செலவிட்டுள்ளது. காதலர் தினத்தன்று நிமிடத்திற்கு 666 ரோஜா பூக்கள் ஆர்டர் செய்யப்பட்டு காதலில் இந்தியா திளைத்த வேளையில், தந்தேராஸ் பண்டிகையின் போது தங்கம் வாங்குவது கடந்த ஆண்டை விட 400 சதவீதம் அதிகரித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டின் மிகவும் விவாதிக்கப்படும் ஒரு புள்ளிவிவரமாக ஆணுறைகளின் விற்பனை அமைந்துள்ளது. சராசரியாக 127 ஆர்டர்களில் ஒரு ஆர்டர் ஆணுறை என்ற விகிதத்தில் விற்பனை நடந்துள்ளது. இதில் உச்சகட்டமாக, சென்னையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் ஓராண்டில் 228 முறை ஆணுறைகளை ஆர்டர் செய்துள்ளார். இதற்காக அவர் செலவிட்ட மொத்த தொகை ரூ.1,06,398 ஆகும். குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஆணுறைகள் விற்பனை 24 சதவீதம் அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது, இந்தியர்களின் தனிப்பட்ட தேவைகளில் ஆன்லைன் தளங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களிலும் சில வியக்கத்தக்க சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் நூடுல்ஸ் சாப்பிடுவதற்காகவே ரூ.4,36,153 செலவு செய்துள்ளார். மும்பையைச் சேர்ந்த மற்றொருவர் 'ரெட் புல் சுகர் ஃப்ரீ' பானத்திற்காக ரூ.16.3 லட்சத்தை வாரி இறைத்துள்ளார். சமையலறைத் தேவைகளைப் பொறுத்தவரை கறிவேப்பிலை, தயிர், பால் போன்றவை மீண்டும் மீண்டும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இதில் கொச்சியைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் 368 முறை கறிவேப்பிலையை மட்டுமே ஆர்டர் செய்து 'சமையல் பிரியர்' என்பதை நிரூபித்துள்ளார். அதேபோல் நொய்டாவைச் சேர்ந்தவர் புரோட்டீன் பொருட்களுக்காக ரூ.2.8 லட்சம் செலவிட்டுள்ளார்.
விலை உயர்ந்த பொருட்கள் ஒருபுறம் இருக்க, மனிதநேயமும் இந்த அறிக்கையில் மிளிர்ந்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், தனக்கு டெலிவரி செய்த ஊழியர்களுக்கு ஓராண்டில் மட்டும் ரூ.68,600 டிப்ஸ் கொடுத்து நெகிழ வைத்துள்ளார். இது தவிர, செல்லப்பிராணிகள் மீதான பாசமும் அதிகரித்துள்ளது; சென்னையைச் சேர்ந்த ஒருவர் தனது வளர்ப்புப் பிராணிகளுக்காக ரூ.2.41 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வாங்கியுள்ளார். மொத்தத்தில் 2025-ஆம் ஆண்டு இன்ஸ்டாமார்ட் அறிக்கை, இந்தியர்களின் வாழ்க்கை முறை டிஜிட்டல் மயமாகிவிட்டதோடு, அவர்களின் தேவைகள் பன்முகத்தன்மை கொண்டதாக மாறியுள்ளதையும் அப்பட்டமாகத் திரையிட்டுக் காட்டுகிறது.