தவெக எம்.எல்.ஏ பேச்சுக்கு குவியும் கண்டனங்கள்..!!
2026 சட்டமன்ற தேர்தலில், தவெக கட்சி தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பான்மை அமைக்க, திமுக கட்சியின் கூட்டணி கட்சிகளான சிபிஐ, சிபிஐஎம், ஐயுஎம்எல், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்களிகள் தவெகவிற்கு ஆதரவளித்தது. இதையடுத்து முதல் சட்டசபை கூடிய நாளில் எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. அப்போது எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, “வாழ்க தமிழ், வெல்க தமிழ்நாடு, மக்களை பிரிக்கும் சனாதனம் ஒழிய வேண்டும்” என்று பேசினார். இது, சில நிமிடங்களில் இந்திய முழுவதில் இருந்தும் கடும் கண்டனங்களை சம்பாதித்தது. தற்போது, சனாதனம் பற்றி தவெக எம்.எல்.ஏ ஒருவர் பேசியிருப்பதும் கண்டனத்திற்குள்ளாகி வருகிறது.
தவெக மதுரை மத்திய தொகுதியின் எம்.எல்.ஏவான முஸ்தஃபா, சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் 217 டாஸ்மாக் கடைகளை மூடியதை பற்றி பேசினார். தொடர்ந்து, இந்தியில் பேசிய அவரிடம் “சனாதனத்தை ஒழிப்போம் என உதயநிதி கூறியிருக்கிறார். அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என இந்தியில் கேட்டார்கள் அதற்கு அவர், “சனாதன தர்மத்தை ஒழிக்கதான் நாங்களும் வந்துள்ளோம்” என கூறினார். இதையடுத்து, பாஜக கட்சியை சேர்ந்த பலரும், இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இது குறித்து கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். ”சட்டமன்ற அவையில் சனாதன இந்து தர்மத்தை ஒழிப்பது குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயநிதி ஸ்டாலின் பேசிய சில நாட்களிலேயே, அவரது கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்து TVK சட்டமன்ற உறுப்பினர் திரு. VMS முஸ்தபா கருத்து தெரிவித்தார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது மட்டுமல்லாமல், ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை நாம் வாழ்வதற்குத் துணை நிற்கும் ஒரு நித்திய தர்மத்தின் மீது, அவர்கள் தங்கள் மனதில் எந்த அளவு வெறுப்பை வளர்த்து வைத்துள்ளனர் என்பதையும் இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மிகக் குறுகிய கால வரலாற்றைக் கொண்ட திமுக மற்றும் TVK ஆகிய இரு கட்சிகளும், ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை மக்களுக்கு நிரூபித்துக் காட்டியுள்ளன. சனாதன இந்து தர்மத்தின் மீது தாங்கள் தொடர்ந்து தொடுத்து வரும் தாக்குதல்கள், தங்களை எந்த நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளன என்பதை திமுக மறந்துவிட்டது. TVKவும் விரைவில் அதை உணரும்.
திமுகவோ அல்லது தவெக-வோ தங்கள் கொள்கையில் உறுதியான துணிச்சலைக் கொண்டிருந்திருந்தால், சனாதன இந்து தர்மத்தை இலக்காகக் கொள்வதே தங்கள் அரசியலின் மையமாக இருக்கும் என்பதைத் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களின்போதே அவர்கள் வெளிப்படையாக அறிவித்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, அவர்கள் மதச்சார்பின்மை மற்றும் நாடகத்தன்மைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டனர்; தற்போது எந்த மக்களின் நம்பிக்கையை அவர்கள் ஆணவத்துடனும், எந்தவித அச்சமுமின்றியும் அவமதிக்கிறார்களோ, அதே மக்களிடம் வாக்குகளைப் பெற்ற பின்னரே தங்கள் உண்மையான நோக்கங்களை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்: சனாதன இந்து தர்மம் என்பது நீங்கள் குத்துவதற்குப் பயன்படுத்தும் ஒரு 'பஞ்சிங் பேக்' (punching bag) அல்ல! இவர்களின் இத்தகைய கருத்துக்களுக்கு, நம் மக்கள் தகுந்த பாடம் புகட்டாமல் விட்டுவிடமாட்டார்கள் என்று நான் உளமார நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.