☰
×

திமுக ஆட்சியில் ரூ.4730 கோடி மணல் குவாரி ஊழல் புகார் - விசாரணை துவக்கம்

 

28 ஆற்று மணல் குவாரிகள் மூலம் ரூ.4,730 கோடி ஊழல் என 2024 ஜூன் மாதம் தமிழ்நாடு டிஜிபிக்கு அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது.

திமுக ஆட்சியில்  28 ஆற்று மணல் குவாரிகள் மூலம் ரூ.4730 கோடி ஊழல் என 2024 ஜூன் மாதம் அமலாக்கத்துறை தமிழ்நாடு டிஜிபிக்கு ஆதாரங்களுடன் கடிதம் எழுதியது. ஐஐடி கான்பூர் தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம் மணல்குவாரிகளில் ஆய்வு செய்து ஊழலை கண்டுபிடித்ததாக அமலாக்கத்துறை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தி பல்வேறு ஆதாரங்களைச் சேகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் படங்கள், GPS தரவுகள் உள்ளிட்ட தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட 490 ஏக்கர் பரப்பளவைத் தாண்டி 2,450 ஏக்கருக்கும் மேல் மணல் அள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்களின் சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மணல் அள்ளும் பணியில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் தொடர்பான GPS மற்றும் geofencing தகவல்களும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ரூ.4,730 கோடி மணல் முறைகேடு குறித்த புகாரில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஒப்பந்ததாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வெறும் அரசியல் குற்றச்சாட்டா அல்லது மிகப்பெரிய முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதா என்பது முழுமையான விசாரணையில் தான் தெரியவரும். இத்தனை ஆண்டுகளாக இந்த முறைகேடுகள் யார் கண்காணிப்பில் நடந்தது ? அரசு அதிகாரிகள் முதல் ஒப்பந்ததாரர்கள் வரை யார் யாருக்கு இதில் தொடர்பு இருக்கிறது ? இந்த மணல் கொள்ளையால் பயனடைந்த அரசியல் மற்றும் அதிகார மட்டத்தின் பின்னணி என்ன ? எதற்காக வழக்குப்பதிவு செய்யாமல் இத்தனை காலம் இழுத்தடிக்கப்பட்டது ? என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என தவெக அரசு உறுதி அளித்துள்ளது.