☰
×

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..! கனிமொழி எம்.பி பயணித்த விமானம் தரையிறங்குவதில் பிரச்சினை

 

டெல்லி விமான நிலையத்திலிருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட 182 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 188 பேருடன் பயணித்தனர்.

இந்த ஏர் இந்தியா பயணிகள் விமானமானது பகல் 11.40 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வந்து தரையிறங்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு 5 நிமிடங்களுக்கு முன்னதாகவே சென்னையில் வந்து தரையிறங்குவதற்கு விமானம் ஓடுபாதையை நெருங்கியது.

இதனையடுத்து விமானமானது சென்னை விமான நிலைய ஓடுபாதையை மிகத் தாழ்வாக நெருங்கி, தரையை தொடச் சென்றது. அந்த நேரத்தில், திடீரென யாரும் எதிர்பாராத விதமாக மீண்டும் உயரப் பறந்து வானில் வட்டமடிக்க தொடங்கியது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடந்து வானில் வட்டமடித்து கொண்டிருந்த விமானம், அதன்பின்பு இரண்டாவது முறையாக, மீண்டும் பகல் 11.45 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலைய ஓடுபாதையில் வந்து தரையிறங்கியது. இதனால் விமானத்தில் இருந்த 182 பயணிகளும், விமான நிலைய ஓடுபாதையில் தரையிறங்க வந்த விமானம், மீண்டும் வானில் பறக்க தொடங்கிவிட்டு அதன்பின்பு இரண்டாவது முறையாக தரையிறங்கியதற்கான காரணம் தெரியாமல் பதற்றமடைந்தனர்.

இதுகுறித்து விளக்கமளித்த சென்னை விமான நிலைய அதிகாரிகள், இது வழக்கமாக நடக்கக்கூடியது தான். ஓடுபாதையில் அந்த நேரத்தில் பாதுகாப்பாக தரையிறங்க வசதி இல்லாத பட்சத்திலும், தரையிறங்குவதற்கான சூழல் முழுமையாக சீராக இல்லாத போதும், காற்றின் வேகம் அதிகமாக இருந்தாலும் அது விமானியின் கவனத்துக்கு செல்லும்.

அப்போது விமானி இறுதி நிமிடத்தில், உடனடியாக விமானத்தை வானில் பறக்க செய்து, மீண்டும் தரையிறக்க செய்வார். இது சென்னை உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் ஏற்கனவே நடந்தது தான் என்று கூறி பயணிகளை அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.