×

கோயில்களை செம்மைப்படுத்தவும், பாதுகாக்கவும் முதல்வர் தலைமையில் குழு!!

 

தமிழ்நாட்டில் பக்தர்களின் வசதியை மேம்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்து சமய திருக்கோயிலின் நிருவாகத்தை முறையாகப் பராமரிக்கவும், பாதுகாக்கவும், மேற்பார்வையிடவும் 1925-ஆம்ஆண்டில் `இந்து சமய அறநிலைய வாரியம்` ஏற்படுத்தப்பட்டது. இந்து திருக்கோயில்கள், அறநிறுவனங்கள் மற்றும் திருமடங்கள் வாரியத்தால் கண்காணிக்கப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து  1959-ஆம் ஆண்டில் இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டம் இயற்றப்பட்டது.  அந்த வகையில் திருக்கோயில்கள் பராமரிப்பு பணி, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அறநிலையத்துறையில் பல்வேறு முக்கிய நலத்திட்டங்கள்அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகர், தமிழில் அர்ச்சனை, கோயில்களின் பராமரிப்பு செலவிற்கு நிதி ஒதுக்கீடு உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழ்நாட்டில் அனைத்து கோயில்களில் பராமரிப்பை செம்மைப்படுத்தவும், பக்தர்களின் வசதியை மேம்படுத்தவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.  குழு தலைவராக முதலமைச்சர் மு க ஸ்டாலின், துணை தலைவராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நியமிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் குழுவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,  சுகிசிவம், மதிவாணன்,ராமசுப்பிரமணியன்  உட்பட 14 பேர் அலுவல் உறுப்பினராக நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.