×

லிங்க்கை தொட்டால் ரூ.85,000 கிடைக்கும்! நம்பி ஏமாந்த கல்லூரி மாணவர் தற்கொலை

 

ஆன்லைனில் வந்த விளம்பரத்தை நம்பி பணத்தை இழந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கே.கே நகர், அடுத்த நெசப்பாக்கம் காணு நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சுபாஷ் (வயது19). பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வங்கி கடன் மூலம் மாத தவணை செலுத்தும் வகையில் ரூ.3 லட்சத்துக்கு பழைய கார் ஒன்றை வாங்கினார். இதற்கிடையில் தனிநபர் கடன் பெற்று காருக்கு வாங்கிய கடனை அடைக்க திட்டமிட்ட சுபாஷ், நேற்று இரவு ஆன்லைனில் பிரபல தனியார் நிறுவன செயலி ஒன்றின் பெயரில் வந்திருந்த விளம்பரத்தில் இருந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டார். அப்போது பேசிய மர்ம நபர் "முதலில் ரூ35 ஆயிரம் செலுத்தினால் உடனடியாக ரூ.85 ஆயிரம் பணம் கிடைக்கும்" என்று ஆசை வார்த்தை கூறினார்.

இதை உண்மை என்று நம்பிய சுபாஷ் தனது செல்போன் எண்ணிற்கு மர்ம நபர் அனுப்பிய "லிங்க்" மூலம் ரூ.35ஆயிரம் பணத்தை செலுத்தினார். ஆனால் நீண்ட நேரமாகியும் பணம் ஏதும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த சுபாஷ், மர்ம நபரை மீண்டும் தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் "சுவிட்ச் ஆப்" செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மோசடியில் பணத்தை பறிகொடுத்தது பற்றி தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் சுபாசை திட்டி கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மன வேதனை அடைந்த சுபாஷ் திடீரென தனது படுக்கையறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைனில் வந்த விளம்பரத்தை நம்பி பணத்தை இழந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.