×

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்காத மாணவர்களுக்கு டிசி வழங்கிய கல்லூரி முதல்வர்

 

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்காததால் மாற்றுச் சான்றிதழ் வாங்கி கொள்ளுமாறு கல்லூரி முதல்வர் பெற்றோர்களுக்கு கடிதம் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் அருப்புக்கோட்டை சாலையில்  செந்திக்குமார் நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)உள்ளது. இக்கல்லூரியில் உள்ள 19 துறைகளில் மொத்தம் 4000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தக் கல்லூரி முதல்வர் சுந்தரபாண்டியன்  வருகைப் பதிவு இல்லாததால் கல்லூரியில் இருந்து நீக்கி உள்ளதாகவும், மாற்றுச் சான்றிதழை பெற்றுக்கொள்ளுமாறும் 85 மாணவர்களின் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

ஆனால் ஆன்லைன்  வகுப்புகளில் சரி‌வர பங்கேற்கவில்லை என்பதால் தங்களை நீக்கி உள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக கல்லூரிகள் நடைபெறவில்லை. ஆன்லைன் வகுப்புகளுக்கு கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. அப்போது, செல்போன் வாங்க வசதி இல்லாததாலும், ரீசார்ஜ் செய்ய வசதி இல்லாததாலும், சரிவர சிக்னல் கிடைக்காத காரணத்தாலும், பலருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தாலும், 85 மாணவர்கள் சரியாக ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை என்று மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதனால் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு  இதனை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.