×

கோவையில் நெகிழ்ச்சி சம்பவம் : 21 ஆண்டுகளுக்கு பின் சாதிய தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி..!

 

தொண்டாமுத்தூரை அடுத்த கெம்பனூர் அண்ணா நகர் பகுதியில் பட்டியலின (SC) மற்றும் பழங்குடியின (ST) சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி வழியாக அரசு பேருந்து எண் 21 இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக சாதி பாகுபாடு காரணமாக அண்ணா நகருக்குள் பேருந்து செல்லாமல் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் கெம்பனூர் பேருந்து நிறுத்தம் வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

கோவை காந்திபுர மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து கெம்பனூர் கிராமம் வரை அரசு நகரப் பேருந்து எண் "21" இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த அரசுப் பேருந்து கெம்பனூரில் பட்டியலின மக்கள் அதிகமாக வசிக்கும் அண்ணா நகர் பகுதிக்குள் மட்டும் செல்லாமல், பல ஆண்டுகளாகத் திருப்பி விடப்பட்டு நிறுத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து வேதனையுடன் குற்றம்சாட்டி வந்தனர். சாதியப் பாகுபாடு மற்றும் தீண்டாமை மனநிலை காரணமாகவே அரசுப் பேருந்து தங்களது பகுதிக்குள் வர மறுப்பதாகக் கூறி வந்தனர்.

இதன் காரணமாக, அண்ணா நகரைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், முதியவர்கள், அன்றாடக் கூலி வேலைக்குச் செல்லும் சாமானிய பொதுமக்கள் எனப் பலரும் தினசரி பல கிலோ மீட்டர் தூரம் கால் கடுக்க நடந்து செல்ல வேண்டிய அவல நிலை நீடித்து வந்தது.

இந்நிலையில், சமீபத்தில் கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசுத் திட்டங்கள் குறித்துச் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை அமைச்சர் வன்னியரசு அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கெம்பனூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்கள் அமைச்சரை நேரில் சந்தித்துத் தங்களது 21 ஆண்டு காலக் கண்ணீர் மனுவை சமர்ப்பித்தனர்.

கோவை கெம்பனூர் அண்ணா நகர் பட்டியலின பகுதிக்குள் 21 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு பேருந்து இயக்கப்பட்டது. அமைச்சர் வன்னியரசு ஆய்வின் நடவடிக்கையால் சாதிய தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, சமூக நீதி வென்றதாக அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்கக் கொண்டாடினர்.