×

கோவை சிறுமி கொலை குற்றவாளி கார்த்திக்கை ஜூன் 5 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு..!!

 

மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி கூறியதாவது;

 

கடந்த 21ம் தேதி இரவு 8.30 மணியளவில் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி காணாமல் போனதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று போலீசார் விசாரித்த நிலையில், அன்றிரவே 10 மணியளவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

இதைத்தொடர்ந்து, கருமத்தம்பட்டி உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிறுமியை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், நாகையைச் சேர்ந்த கார்த்திக்,33, சிறுமியின் அண்டை வீட்டில் வசித்து வந்தார். இவர் சிறுமியை அழைத்துச் சென்றது உறுதி செய்யப்பட்டது.

கண்ணம்பாளையத்தில் உள்ள மரியா ரோஸ் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருந்த கார்த்திக்கை போலீசார் சுற்றி வளைத்தனர்.

அப்போது, போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்று, மாடியில் இருந்து குதித்ததில், வலது கை மற்றும் வலது காலில் முறிவு ஏற்பட்டது. பின்னர், அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் குற்றவாளி கார்த்திக் சிறுமியை ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்து, கண்ணம்பாளையம் குளம் அருகே சிறுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், நடைபெற்ற விசாரணையில், பாரதிபுரம் பள்ளபாளையத்தைச் சேர்ந்த மோகன்,30, என்பவர் முக்கிய குற்றவாளி கார்த்திக்கிற்கு உறுதுணையாக இருந்துள்ளார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட கார்த்திக் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக 24 மணிநேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்,  போக்சோ வழக்கு என்பதால் சிறுமியின் விபரங்களை வெளியிடக் கூடாது.

ஊடகங்கள் அதனை வெளியிட்டிருந்தால் உடனடியாக நீக்க வேண்டும். இது தொடர்பாக விசாரணை நடத்தும் போது, போலீசாருடன் சேர்ந்து குற்றவாளியும் சிறுமியை தேடியுள்ளார். கார்த்திக் திருமணமாகி மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

குற்றவாளி கார்த்திக்கை ஜூன் 5 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..