×

பாலியல் தொல்லை... மாணவி தூக்கிட்டு தற்கொலை - ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ!

 

தமிழ்நாட்டில் பத்ம ஷேசாத்ரி பள்ளியாசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவரால் பல்வேறு மாணவிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக புகார் கொடுக்கப்பட்டு தற்போது அவர் சிறையில் இருக்கிறார். இதற்குப் பின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளும் ஆசிரியர்கள் மீது புகார் தெரிவித்தனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அரசு, பள்ளியளவில் கமிட்டி அமைக்க வேண்டும், ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்கள் எப்படி வர வேண்டும் என பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

தற்போது இது கொஞ்சம் கொஞ்சமாக செயல்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், கோவையில் அரங்கேறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் கடிதம் எழுதிவைத்து விட்டு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கோவையைச் சேர்ந்த மாணவி ஒருவர் 11ஆம் வகுப்பு வரை சின்மயா வித்யாலயா என்ற தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பள்ளியில் படிக்க விரும்பவில்லை எனக்கூறி மாணவி டிசி வாங்கிவிட்டு வேறு பள்ளியில் சேர்ந்தார்.

ஆனால் ஏன் பள்ளி மாறினார் என்பதற்கான காரணத்தை பெற்றோரிடம் சொல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அலறிதுடித்த பெற்றோர் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  வழக்குப்பதிவு செய்து, மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதற்குப் பின்னர் மாணவியின் பள்ளி நண்பரிடம் செய்யப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

நண்பர் வைஷ்ணவ் கூறுகையில், "மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர் என் பிரெண்டிடம் போன் எண்ணை வாங்கி வாட்ஸ்அப்பில் சாட் செய்துள்ளார். ஆசிரியர் என்பதால் என் பிரெண்டும் சாட் செய்தார். வாட்ஸ்அப்பிலே பாலியல் ரீதியாக பேசியுள்ளார். கடந்தாண்டு என்னுடைய பிரெண்டை தனியே வரவழைத்து மிதுன் சக்கரவர்த்தி, மேலாடையை கழற்றி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்” என்றார் உருக்கமாக.

இதனிடையே மாணவி எழுதிவைத்த கடிதம் ஒன்றும் சிக்கியுள்ளது. அதில் மிதுன் சக்கரவர்த்தி மட்டுமில்லாமல் மேலும் இருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. அக்கடிதத்தில், "யாரையும் சும்மா விடக் கூடாது. ரிதாவோட தாத்தா, எலிசா சாருவோட அப்பா, இந்த சார். யாரையும் சும்மா விடக் கூடாது” என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கடும் போராட்டங்களுக்குப் பிறகு மிதுன் சக்ரவர்த்தி மீது கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் போக்சோ வழக்குப் பதிவு செய்துள்ளது. அவரைக் கைதுசெய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.