×

கோவை அன்னூரில் அதிர்ச்சி: கொசு மருந்து அடித்த பின் 2 பேர் மூச்சுத்திணறி பலி..!

 

கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 3 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் வந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த அன்னூர் பேரூராட்சி நிர்வாகம், அன்னூர், சத்தி சாலை, உப்பு தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் கொசு மருந்து அடிக்கும் பணியை நேற்று  தொடங்கியது.

கழிவுநீர் கால்வாய், குப்பை தொட்டி இருக்கும் இடங்கள் மற்றும் தண்ணீர் தேங்கும் இடங்களில் கொசு மருந்தை பணியாளர்கள் தெளித்தனர். மேலும், குடியிருப்புகளில் உள்ள வீடுகளுக்குள் சென்றும் ஊழியர்கள் கொசு மருந்தை தெளித்திருக்கின்றனர்.

இவ்வாறு இன்று உப்பு தோட்டம் பகுதியில் கொசு மருந்து அடித்த போது, அந்த பகுதியைச் சேர்ந்த மோகன் (வயது 65). ராணி என்கிற பிரேமா (வயது 75) ஆகிய இருவர் மூச்சுத் திணறி உயிரிந்துள்ளனர். ஏற்கனவே இவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக வீட்டில் இருந்தபடி சிகிச்சை எடுத்து வந்துள்ளனர்.

இந்த சூழலில்தான் இவர்கள் இருவரின் வீட்டிலும் கொசு மருந்து அடித்த அடுத்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர். இதனிடையே குறைவான தண்ணீரில் அதிக கொசு மருந்தை கலந்து குடியிருப்பு பகுதிக்குள் பணியாளர்கள் அடித்ததாக கூறி அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பிரச்சனை குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, "டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை சுற்றி 400 மீட்டர் தொலைவிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கொசு மருந்து அடிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன் பேரில் தான் இந்த குடியிருப்பு பகுதிகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை" என கூறினார்.

செயல் அலுவலரின் இந்த பதிலால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள், பேரூராட்சியின் அலட்சிய போக்கை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். இதனால் அங்கு சற்றே பரபரப்பான சூழல் உருவானது.

சம்பவம் குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் கூறுகையில், "உப்பு தோட்டம் பகுதியில் கடந்த 10 நாட்களில் 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதித்துள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் இப்பகுதியில் கொசு மருந்தை அடிக்கப்பட்டது. பேரூராட்சி பணியாளர்கள் சம்பந்தப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் நேற்று சென்று மருந்து அடித்தனர். இந்த மருந்து அடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மட்டுமே உதவியாக இருக்கும். பொதுமக்களுக்கு எந்தவிதமான மூச்சு திணறலும் ஏற்படாது.

இருப்பினும் இப்பகுதியில் டெங்கு காய்ச்சல் மருந்து அடித்தபோது இருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதில் உயிரிழந்த மோகன் என்பவர் குடிப்பழக்கம் அதிகமாக இருந்ததால் 2 நாட்களில் அவர் உயிரிழந்து விடுவார் என்று அன்னூர் தனியார் மருத்துவமனையில் கூறியுள்ளனர்.

இதனால் மோகனின் உறவினர்கள் அவரை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதேபோல் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராணி என்கிற பிரேமா-வும் நுரையீரல் பிரச்சனை காரணமாகவே உயிரிழந்தார் என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் பொதுமக்கள் கொசு மருந்து அடித்ததால் தான் உயரிழந்ததாக கூறி வருகின்றனர்" என தெரிவித்தார்.