கரப்பான்பூச்சி கட்சியின் முதல் போராட்டம் அறிவிப்பு
டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜுன் 6-ஆம் தேதி அமைதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் நாட்டில் போராடும் இளைஞர்களையும், உழைக்கும் மக்களையும் பற்றி கடந்த மே 15ஆம் தேதி தெரிவித்த கருத்துதான் “கரப்பான் பூச்சி” ஜனதா பார்ட்டி உருவாக காரணமாக இருந்தது. அவர்,
“சமூகத்தில் அமைப்பைத் தாக்கும் சில ஒட்டுண்ணிகள் உள்ளனர். அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை, தொழில் வாழ்க்கையிலும் எந்த இடமும் கிடைப்பதில்லை. அவர்களில் சிலர் ஊடகவியலாளர்களாகவும்; சிலர் சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்குபவர்களாகவும்; சிலர் ஆர்டிஐ ஆர்வலர்களாகவும் மாறி, பின்னர் அனைவரையும் தாக்கத் தொடங்குகின்றனர்" என கூறியிருந்தார். உழைக்கும் மக்களை ஏளனமாக எண்ணி கொச்சையான கருத்துகளை தெரிவிப்பதையே வேலையாக கொண்ட இவர் சொன்ன இக்கருத்துதான் இன்று “கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி” (CJP) என்கிற ஒரு புதிய, பிரபலமான “ட்ரெண்டின்” தொடக்கத்திற்கு விதை போட்டது.
இளைஞர்களை கரப்பான்கள் என்று இழிவுபடுத்திய போதிலும்,“ஆம், நாங்கள் கரப்பான்கள்தான்”, “கரப்பானாக இருப்பதில் என்ன கேவலம்”, “கரப்பான் மிகவும் வலிமைகொண்ட பூச்சி” என்று சூர்ய காந்த் சொன்ன வார்த்தையை வைத்தே உருவாக்கப்பட்ட “கட்சி”தான் “கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி”. இதை உருவாக்கியது அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பு பயின்றுவரும் அபிஜித் திப்கே என்பவர். இவர் சில வருடங்களுக்கு முன்னாள் ஆம் ஆத்மி கட்சிக்காக பிரசாந்த் கிஷோரை போல வேலை பார்த்த ஒரு தேர்தல் வியூக அமைப்பாளர் ஆவார். தற்போது 2 கோடிக்கும் மேற்பட்டவர்கள் சி.ஜே.பி.யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில் கரப்பான்பூச்சி கட்சியின் முதல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. துறை அமைச்சர் ராஜினாமா செய்வதற்கு பதில், சிபிஎஸ்சி அதிகாரிகள் 2 பேரை சஸ்பென்ட் செய்திருப்பது வெறும் கண் துடைப்பு. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும். நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ விவகாரம் தொடர்பாக டெல்லி, ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜுன் 6-ஆம் தேதி அமைதி போராட்டம் நடைபெறும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் அறிவித்துள்ளனர். மேலும் தற்போதுள்ள அரசியல் முறையில் நிறைய குறைகள் உள்ளன. அதனால்தான் இளம் தலைமுறையினர் எங்களைப் போன்ற இயக்கத்திற்கு ஆதரவு தருகின்றனர். ஆளுங்கட்சி மீதும் எதிர்க்கட்சிகள் மீதும் கூட இளம் தலைமுறை அதிருப்தியாக உள்ளது என்றும் அவர்கள் கூறினர்.