கோ ஆப் டெக்ஸ் நிறுவன பெண் ஊழியர்களை மிரட்டும் உயரதிகாரிகள்
கோ ஆப் டெக்ஸ் நிறுவன பொருட்களை வெளியில் சென்று விற்று வர பெண் ஊழியர்களை உயர் அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோ ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களை, வெளியில் சென்று பொருட்களை விற்று விட்டு வருமாறு உயரதிகாரிகள் மிரட்டி வருகின்றனர். மழை அடித்தாலும் பரவாயில்லை. வெயில் அடித்தாலும் பரவாயில்லை. ரோட்டில் அலைந்தாவது பொருள்களை விற்றுவருமாறு என்று பெண் ஊழியர்கள் மிரட்டப்படுகின்றனர். இதனால் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி வருகின்றனர்.பொருட்களை விற்கவில்லை என்றால் அவர்களுக்கு சம்பளம் பிடித்தம், மெமோ வழங்கப்படும் என்று அவர்களை எச்சரிப்பதாகவும் தெரிகிறது.
சாதாரண ஊழியர்கள் என்ன செய்வார்கள் என்பதை அதிகாரிகள் கவனத்தில் கொள்வதில்லை. ஆனால் கடந்த 2012ம் ஆண்டு கோ ஆப் டெக்ஸ் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்ட, சகாயம் ஐ.ஏஎஸ் கடனில் தத்தளித்த கைத்தறித் துறையை சர்வதேச அளவில் புகழ்பெற வைத்தவர். வேட்டி தினம், தாவணி தினம், தேசிய விருதுகள் என கோ-ஆப்டெக்ஸ் துறையையே தலைகீழாகப் புரட்டிப் போட்டார். அரசு ஆண் மற்றும் பெண் ஊழியர்களை கோ ஆப்டெக்ஸ் ஆடைகளை பயன்படுத்த வைத்தார். அரசு அலுவலகங்களில் ஸ்டால் வைத்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்தார். மேலும் மக்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பொருள்களை வாங்க வைத்தார். ஆனால் தற்போதைய மேலாண்மை இயக்குனர் இன்னசெண்ட் திவ்யா அதைச் செய்வதில்லை. மாறாக விற்பனை நிலையங்களை மூடுவது, சேலையை தவிர எதையும் கொள்முதல் செய்ய வேண்டாம் என தடைவிதிப்பது என்று தொடர்ச்சியாக தவறான நடவடிக்கை எடுத்து வருகிறார். அதேபோன்று சில உயரதிகாரிகள் இப்படி பெண் ஊழியர்களை மிரட்டுவதையும் அவர் தட்டிக் கேட்காமல் மௌனம் காத்து வருகிறார். முதல்வர் விஜய் நெருங்கிய உறவினராக கூறப்படும் பெண் ஐஏஎஸ் அதிகாரியின் நிறுவனத்தில் இப்படி நடந்தால், எப்படி? மற்ற துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்று தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.