☰
×

ரூ.3,108 கோடி மதிப்பில் மெகா குடிநீர் திட்டம்- முதல்வர் விஜய் நாளை அடிக்கல்

 

சென்னை மாநகர மக்களின் நீண்ட நாள் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ரூ.3,108 கோடி மதிப்பிலான மெகா குடிநீர் திட்டத்திற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை அடிக்கல் நாட்டுகிறார்.


இதுவரை சென்னைக்கு பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து நேரடி குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. ஒரு இடத்தில் குழாய் உடைந்தாலும், ஒட்டுமொத்த ஏரியாவுக்கும் தண்ணீர் கிடைக்காது. அதை மாற்றி, சென்னையை சுற்றி வளையம் போல் (Ring) 110 கி.மீ நீளத்திற்கு ராட்சத குடிநீர் குழாய் அமைக்கப்படுகிறது. இதனுடன் அனைத்து நீர்த்தேக்கங்களும், கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களும் (Desalination Plant) இணைக்கப்படும்.

இதனால் ஒரு ஏரியில் தண்ணீர் இல்லாவிட்டாலும், மற்றொரு ஏரி அல்லது கடல்நீர் நிலையத்தில் இருந்து வளையம் வழியாக தண்ணீர் வரும். இனி கோடையிலும் தட்டுப்பாடு இல்லை. ஒரு இடத்தில் குழாய் உடைந்தாலும், மறுபக்க வளையம் வழியாக தண்ணீர் திருப்பி விடப்படும். 2 நாள், 3 நாள் குடிநீர் நிறுத்தம் இனி கிடையாது. வடசென்னை முதல் தென் சென்னை OMR வரை அனைத்து பகுதிகளுக்கும் ஒரே சீரான வேகத்தில் (Pressure) குடிநீர் கிடைக்கும். மாடியில் தண்ணீர் ஏறவில்லை என்ற புகார் முடிவுக்கு வரும். 2035-ம் ஆண்டு மக்கள் தொகை பெருக்கத்தை கணக்கில் கொண்டு இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள 1 கோடி மக்களுடன், புதிதாக இணைக்கப்பட்ட புறநகர் பகுதிகளுக்கும் பலன் அளிக்கும். பழைய குழாய்களில் 20% தண்ணீர் கசிவால் வீணாகிறது. புதிய ரிங் மெயின் மூலம் கசிவு 5% ஆக குறையும். முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை காலை 10 மணிக்கு புழல் நீர்த்தேக்கத்தில் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார். 24 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.