சென்னையில் 'காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்' — முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்!
தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் பசியை போக்கி, கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு மட்டுமே காலை உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏழை, எளிய நடுத்தர குடும்பங்களை சேர்ந்த 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா முதலில் விருதுநகரில் நடைபெறுவதாக இருந்தது. பின்னர் பெரம்பூரில் நடைபெறும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தான் திருவான்மியூரில் உள்ள பள்ளியில் முதலமைச்சர் அந்த திட்டத்தை தொடங்கி வைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா, வருகிற 22-ந்தேதி சென்னை திருவான்மியூரில் நடைபெற உள்ளது. திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேரில் கலந்துகொண்டு, பள்ளி மாணவர்களுக்கு இத்திட்டத்தை முறைப்படி தொடங்கி வைக்கிறார். இதற்கான விரிவான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.