லண்டனில் அஜித்தை சந்தித்த வீடியோவை பகிர்ந்த CM விஜய்..!
லண்டன் சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் நடைபெற்ற 'லெ மான்ஸ்' கார் பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித்குமாரை, தமிழக முதல்வர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அஜித்தை நோக்கி விஜய் ஓடிவந்து கட்டித்தழுவி வரவேற்ற காட்சிகள் மற்றும் பந்தயத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த நிகழ்வு தொடர்பான காணொளிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. பல ஆண்டுகளுக்குப் பிறகு இரு துருவ நட்சத்திரங்களும் ஒரே மேடையில் நட்புடன் இணைந்த இக்காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.
முதலமைச்சர் விஜய் நடிகர் அஜித் குமாருக்கு சிறப்பு நினைவுப் பரிசாக ரேஸ் கார் மாதிரியை வழங்கி கவுரவித்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாகவும் தனது மரியாதையை வெளிப்படுத்தும் வகையிலும், நடிகர் அஜித் குமார் முதலமைச்சர் விஜய்க்கு பந்தய ஹெல்மெட்டை அன்பு பரிசாக வழங்கினார்.
லண்டன் சில்வர் ஸ்டோன் ரேசிங் கர்க்யூட்டில் நடிகர் அஜித்குமாரை சந்தித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் முதலமைச்சர் விஜய் பகிர்ந்துள்ளார்.
நடிகர் அஜித்குமார் பங்கேற்ற மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்திருந்தார்.
அந்த வீடியோவில், விஜயும் அஜித்தும் ஆரத்தழுவியது முதல், சில்வர் ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் முதலமைச்சர் விஜயை அமரவைத்து நடிகர் அஜித்குமார் காரை ஓட்டியுள்ளது வரை இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோவை கண்டு, விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.