பிரதமர் மோடியிடம் நேரடியாக கேட்ட முதல்வர் விஜய்! முதல்வர் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?
சென்னை ஐஐடி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ரூபாய் 13,000 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை நாட்டிற்கு அர்ப்பணித்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கலும் நாட்டினார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் விஜய், "பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. தமிழ்நாடு பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்த பண்பாடுகளையும், அவற்றை இன்றளவும் உயிர்ப்புடன் பேணி பாதுகாத்து வரும் மக்களையும் கொண்ட சிறப்புமிக்க மாநிலமாகும். உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் வாழும் இம்மாநிலம், சிறப்பான வரலாறு, இலக்கியம், கலை, கட்டிடக்கலை மற்றும் பண்பாடு மரபுகளால் தனித்துவம் பெற்றுள்ளது.
'பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்' என்ற உயரிய தத்துவத்தின் அடிப்படையில் நமது அரசு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்து கல்வி, சுகாதாரம், வேளாண் வளர்ச்சி, மீனவர் நலன் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. நமது அரசு குழந்தைகள், பெண்கள், திருநர்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களைத் தீட்டி, சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு தொழில், அறிவியல், கல்வி, கலை, இலக்கியம், சமூகநீதி ஆகிய துறைகளில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களித்து வரும் மாநிலமாகும். ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படும்போது அதன் பலன் நேரடியாக மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும் என்பதே நமது அணுகுமுறை.
தமிழ்நாடு புதிய வாய்ப்புகளை உருவாக்கி, 2036- ஆம் ஆண்டில் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கினை நோக்கி வேளாண்மை, தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திட்டங்களைத் தீட்டி வருகிறது. இந்த வளர்ச்சியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல புத்தாக்கம், தொழில் முதலீடு, உள்கட்டமைப்பு ஆகிய மூன்றிற்கும் நாம் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறோம். அதே நேரத்தில் வளர்ச்சியின் பயன், சென்னை மாநகரத்தைத் தாண்டி தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறோம்.
தமிழ்நாட்டின் இளைஞர்கள், நமது மிகப்பெரிய பலம். அவர்களின் திறமை, தொழில்நுட்ப அறிவு, புதுமை சிந்தனை ஆகியவற்றை உலகளவிலான வாய்ப்புகளுடன் இணைப்பதே நமது இலக்கு. இன்று நாம் தொடங்கும் மற்றும் நிறைவேற்றும் திட்டங்கள், அடுத்த தலைமுறைகளுக்காக முதலீடுகளாக அமைய வேண்டும்.
மதுரை, கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு மறுபரிசீலிக்க வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் மூன்றாம் கட்டத் திட்டத்துக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும். கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டத்தை தேசிய திட்டமாகக் கருதி நிறைவேற்ற வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்; ஓசூர்- பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.