அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: 20% தீபாவளி போனஸ் அறிவித்தார் முதல்வர் விஜய்..!
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும். பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டிற்கும் முக்கியப் பங்களிக்கும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் உழைப்பையும். அர்ப்பணிப்பையும் அங்கீகரித்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில், 2025-26ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு
அதன்படி, லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் C' மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்தம் 20 சதவீதம் வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
மின் பகிர்மானக் கழகம், போக்குவரத்து ஊழியர்களுக்கு
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் 17 பிரிவு தொழிலாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 கருணைத் தொகை என மொத்தம் 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
லாபம் ஈட்டாத பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு
லாபம் ஈட்டாத பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் C மற்றும் D பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்தம் 10 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகியவற்றில் பணிபுரியும் தகுதியுடைய 'C' மற்றும் 'D' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படும்.
குடிநீர் வாரிய ஊழியர்களுக்கு
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் 'C' மற்றும் 'D' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் வழங்கப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணியக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3,000/-கருணைத் தொகையாக வழங்கப்படும்.
இதனால் போனஸ் பெறத் தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 8,400/- மற்றும் அதிகபட்சம் ரூ.16,800/- வரை பெறுவார்கள்.
ரூ.367 கோடி 20 லட்சம் போனஸ்
மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 60 ஆயிரத்து 497 தொழிலாளர்களுக்கு 367 கோடியே 20 லட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும். இது தவிர, பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும்.
அரசின் இந்த நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மேலும் ஊக்கத்துடன் செயல்படவும், எதிர்வரும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் வழிவகை செய்யும்.