ரூ.1,194 கோடி மதிப்பிலான திட்டங்கள் : தஞ்சையில் இன்று தொடங்கி வைக்கும் முதல்வர்..!!
தஞ்சையில் திமுக எம்.எல்.ஏ வீட்டு திருமண விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.
இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக தஞ்சை மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று (ஜூன் 15) மாலை 6 மணியளவில் தஞ்சை டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக முதன் முறையாக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். முன்னதாக இன்று காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்த முதல்வர், பின்னர் சாலை மார்க்கமாக கல்லணைக்கு வந்தடைந்தார். கல்லணையை திறந்து வைத்த பின்னர், தஞ்சை இராமநாதன் ரவுண்டானாவில் இருந்து - பழைய பேருந்து நிலையம் வரை ரோடு ஷோ சென்றார்.
அப்போது வழிநெடுகிலும் காத்திருந்த தொண்டர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். பின்னர் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரே புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை திறந்து வைத்தார். இரவு தஞ்சை அரசினர் ஓய்வு இல்லத்தில் தங்குகிறார். இதனைத்தொடர்ந்து இன்று (16.06.25 - திங்கட்கிழமை) திமுக சட்டமன்ற உறுப்பினரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்கிறார். காலை 9.30 மணியளவில் தஞ்சை மஹாராஜா மஹாலில் நடைபெறும் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரின் தம்பி மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், அரசு சரபோஜி கல்லூரிக்குச் செல்கிறார்.
காலை 11 மணியளவில் தஞ்சை அரசு சரபோஜி கல்லூரி மைதானத்தில் 1,194 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்தல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு அங்கிருந்து திருச்சி விமானம் நிலையத்திற்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் சென்னை திரும்புவார் எனக்கூறப்படுகிறது.