×

முகக்கவசம் அணியாமல் இருந்த மக்கள்..  சாலையில் இறங்கி இளைஞருக்கு மாஸ்க் அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஸ்டாலின்..

 


சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சாலையில் இறங்கி பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. கடந்த  24 மணிநேரத்தில் 1,728 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  6 பேர் உயிரிழந்துள்ளனர்.  தற்போது 10, 634 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு 1,700 ஐ கடந்திருப்பது சற்று கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் சென்னையில் மட்டும் பாதிப்பு இரட்டிப்பாகி  876 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.  முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும்  பொது இடங்களில் தனி மனித இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.  சென்னையில் கடந்த 4 நாட்களில் 5.45 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது.  முக கவசம் அணிவது குறித்து தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இன்று சென்னையில் முக கவசம் அணியாமல் சென்ற பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முக கவசங்களை வழங்கினார். சென்னை அண்ணா சாலையில் காரில் சென்று கொண்டிருந்த அவர், பொதுமக்கள் மாஸ்க் அணியாமல் சுற்றித்திரிந்ததைப் பார்த்து உடனடியாக காரில் இருந்து இறங்கினார். அப்போது அங்கு மாஸ்க் அணியாமல் நின்றிருந்த இளைஞர் ஒருவருக்கு அவரே மாஸ்கை போட்டுவிட்டார்.  தொடர்ந்து  கொஞ்சம் தூரம் நடந்துசென்ற ஸ்டாலின் அங்கு முக கவசம் அணியாமல் இருந்தவர்களுக்கு மாஸ்க் வழங்கினார்.

சுதாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கையில் மாஸ்குகளை வைத்துக்கொண்டு அனைவருக்கும்  வழங்கி வந்தார்.  அப்போது  முகக்கவசம் அணியாமல்  பொது இடங்களுக்குச் செல்வது பாதுகாப்பு இல்லை  என்றும், அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.. முதலமைச்சரே வீதியில் இறங்கி விழிப்புணர்வு செய்த இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.