"அன்பும் மனிதநேயமும் தழைத்திடச் செய்திடுவோம்" - வள்ளலார் நினைவு போற்றி முதலமைச்சர் ட்வீட்!
வள்ளலார் நினைவை போற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இராமலிங்க அடிகளார் இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர்"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர், திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்பு பெயர் பெற்றவர். கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தியவர். இராமலிங்க அடிகள் 1867 ஆம் ஆண்டு வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று தருமசாலையை தொடங்கினார். இந்த தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது. தற்போது தருமசாலைக்கான உணவுப்பொருட்களை தமிழக அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது . மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியைப் போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றப்படுகிறது.
இந்த சூழலில் தைப்பூச நட்சத்திரத்தன்று சத்தியஞான சபையில் 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 151 வது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபபெற்று வருகிறது. இன்று காலை 6 மணிக்கு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. காலை 10 மணிக்கும் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. இறுதி ஜோதி தரிசினமான நாளை காலை 5.30 மணிக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "வாடிய பயிரைக் கண்டால் மனம் வாடும் இரக்கமும், பட்டினி வயிறுகளின் பசியாற்றிட அணையா அடுப்பு மூலம் உணவளிக்கும் கருணையும், சாதி பேதமற்ற சமரச சன்மார்க்க நெறியும் கொண்டவரான வடலூர் #வள்ளலார் இராமலிங்க அடிகள் அவர்களின் நினைவு போற்றி, அன்பும் மனிதநேயமும் தழைத்திடச் செய்திடுவோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.