×

"எள் முனையளவு கூட பின்வாங்க மாட்டோம்" - விமர்சனங்களை தூள் தூளாக்கிய முதல்வர் ஸ்டாலின்... அதிர்ந்த அரங்கம்!

 

2022ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக இந்தக் கூட்டமும் கலைவாணர் அரங்கிலேயே நடந்து வருகிறது. ஆளுநரின் சிறப்புரையுடன் நேற்று தொடங்கப்பட்ட சட்டப்பேரவைக் கூட்டத்தில் அதிமுக, விசிக கட்சிகள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. இந்நிலையில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று கேள்வி நேரம் நடைபெற்றது. இது நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவை வரலாற்றில் இதுவே முதன்முறை.

அப்போது நீட் குறித்த அரசின் நிலைப்பாட்டை விளக்கி பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "கல்வி என்பதை அடிப்படை உரிமையாகச் செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கம். எந்தவொரு கல்லூரிச் சேர்க்கையாக இருந்தாலும், அதற்கு வைக்கப்படும் நுழைவுத் தேர்வானது ஏழை எளிய, கிராமப்புற விளிம்பு நிலை மாணவ சமுதாயத்தை பாதிக்கும். அதனால் 10,12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரி மாணவர் சேர்க்கை அமைய வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. இந்த அடிப்படையில்தான் கலைஞர் மாநிலளவில் நடத்தப்பட்டு வந்த நுழைவுத் தேர்வுகளை, 2007 ஆம் ஆண்டு அகற்றி, அதற்காகத் தனிச் சட்டம் இயற்றினார்.

இதன்மூம உருவான மருத்துவர்கள் மூலமாக இன்று மருத்துவத் துறையிலே நம் நாட்டிற்கே முன்னோடியாக நாம் விளங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால், கடந்த காலத்தில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கான திருத்தச் சட்டம், நம் மாணவர்களை வெகுவாக பாதித்துள்ளது. மாநில அரசுகளின் மருத்துவக் கல்லூரிகளில் எவ்வாறு மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யக்கூடிய உரிமையை மாநில அரசுகளிடமிருந்து பறித்துவிட்டது. வசதி வாய்ப்புகள் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாகவும், பள்ளிக் கல்வி அமைப்பையே அர்த்தமற்றதாக ஆக்குவதாகவும் இந்த “நீட்’ தேர்வு முறை உள்ளது.

இவ்வாறு மாணவர்களின் கல்விக் கனவைச் சிதைப்பதாக மட்டுமல்ல; இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தை சீர்குலைப்பதாகவும் இந்தச் செயல்கள் அமைந்துவிட்டன. இதனை நாம் வேடிக்கை பார்க்க முடியாது. மாணவர்களது எதிர்காலம் பாழாகி வருவதை கண்டும் காணாமல் நாம் இருந்து விடமுடியாது. இதனைச் சரிசெய்து, இந்த அவையால் ஒருமனதாக செப்.19 அன்று சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது. சட்டமுன்வடிவு இன்னமும் ஆளுரால், குடியரசுத் தலைவருடைய ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படாமல் இருக்கிறது. இதுதொடர்பாக அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க திட்டமிட்டோம்.

ஆனால் அவர் சந்திக்க மறுக்கிறார். இது மக்களாட்சியினுடைய மாண்புக்கு எதிரானதாகும். சமூக நீதியை நிலைநாட்டுவதில் நமது நாட்டிற்கே முன்னோடியாக விளங்கும் தமிழ்நாட்டின் வரலாற்றையும், திராவிட இயக்கங்களின் வரலாற்றையும் புரட்டிப் பார்க்கும் போது, நமது வெற்றிகள் அனைத்தும் நீண்ட நெடிய அரசியல், சட்டம் மற்றும் மக்கள் போராட்டங்களுக்குப் பின்னரே கிட்டியிருக்கின்றன. நாமும், நமது மாநிலமும் இன்று அடைந்துள்ள இந்த வளர்ச்சியை இப்போராட்டங்களின் மூலமாகத்தான் நாம் பெற்றுள்ளோம் என்பதை இந்த அவையிலே நான் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். 

எனவே, நீட்டுக்கு எதிரான நமது இந்தப் போராட்டத்தையும், நாம் நமது கொள்கையிலிருந்து எள்முனையளவு கூட பின்வாங்காமல் முன்னெடுத்துச் செல்வோம். அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை நாளை மறுநாள் கூட்டுவது என்று முடிவு செய்திருக்கிறோம். அந்தக் கூட்டத்தில் நீங்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன். உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படக்கூடிய முடிவுகளின் அடிப்படையில் நீட் தேர்வுக்கு எதிரான, சமூக நீதிக்கான நமது போராட்டம் தொடரும் என்பதை இம்மாமன்றத்தில் தெரிவித்து அமைகிறேன்” என்றார்.