×

"சவுண்ட் விட மாட்டேன்; எப்போவும் ஆக்‌ஷன் தான்" - முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

 

கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் மக்களுக்கு நலத்திட்ட வழங்கவிருந்தார். அந்த வகையில் இன்று காலை விமானம் மூலமாக கோவைக்கு வருகை தந்தார். வ.உ.சி மைதானத்தில் ரூ.441.76 கோடி மதிப்பில் 23,534 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

அப்போது பேசிய அவர், "எங்களுக்கு வாக்கு அளித்தவர்கள், வாக்கு அளிக்காதவர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் பாரபட்சமின்றி சேவையாற்றி வருகிறோம். நான் எப்போதும் அதிகம் பேசமாட்டேன். செயலில் எனது பணி இருக்கும். அனைத்திலும் தலைசிறந்த மாவட்டமாக கோவையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த விமான நிலைய விரிவாக்க பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

கடந்த ஆட்சில்காலத்தில் திட்ட சாலை பணிகள் மேற்கொள்ளவில்லை. மீண்டும் திட்ட சாலைகள் மேம்படுத்த உதவி செய்யப்படும். மாநகரில் உள்ள சிறைசாலை புறநகருக்கு கொண்டு செல்லப்படும். காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும். தமிழ்நாட்டின் வசிக்கும் மக்களின் அரசாக திமுக அரசு செயல்படும். ஆட்சியை அமைத்த அன்றே உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற தனித்துறையை உருவாக்கினோம். லட்சக்கணக்கான மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நிறைவேற்ற முடியாத மனுக்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.