×

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பில்லையா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

 

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் எங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான #SamagraShiksha நிதி ஒதுக்கப்படும் என்பது எவ்விதத்தில் நியாயம்? என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு ஒன்றியக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் சமீபத்தில் தெரிவித்த கருத்துகள் தமிழ்நாட்டில் பெருத்த கவலையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன. இருமொழிக் கொள்கையைப் பின்பற்றுவதில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது. அலுவல் மொழிகள் விதி, 1976-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, 'அலுவல் மொழிச் சட்டம், 1963'-ஐச் செயல்படுத்துவதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நவோதயா வித்யாலயா போன்ற ஒன்றிய அரசுப் பள்ளிகள் மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுவதால்தான், தமிழ்நாட்டில் அவை நிறுவப்படவில்லை.
ஒன்றிய அரசின் இரண்டு வெவ்வேறு திட்டங்களான 'சமக்ர சிக்ஷா' திட்டத்தையும், தேசிய கல்விக் கொள்கையைப் பிரதிபலிக்கும் பி.எம்.ஸ்ரீ. திட்டத்தையும் ஒன்றாகப் பொருத்திப் பார்ப்பது என்பது அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியாதது.