×

"எங்கள் மாநிலத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி" - ராம்நாத் கோவிந்திற்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!
 

 

இந்தியக் குடியரசுத் தலைவராக வெற்றிகரமாக தனது பணியினை நிறைவு செய்துள்ள ராம் நாத் கோவிந்த்-க்கு  தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு  இன்று பதவி ஏற்றுள்ளார் . அதே சமயம் இதுவரை குடியரசு தலைவராக பதவி வகித்து வந்த ராம்நாத் கோவிந்த் இன்று பதவியில் இருந்து வெளியேறுகிறார். 14வது குடியரசு தலைவராக பொறுப்பேற்று திறம்பட செயலாற்றி வந்த ராம்நாத் கோவிந்துக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  நாடு விடுதலை அடைந்தவுடன் அன்று இளைஞர்களிடம் நாட்டை சிறப்பாக கட்டமைக்க வேண்டும் என்ற கனவும் ஆற்றலும் இருந்தது.  அதே கனவுகளை சுமந்த இளைஞராக நாட்டின் கட்டுமானத்தில் நிறைவான பங்களிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று தான் செயலாற்ற தொடங்கியதாகவும்,  குடிசை வீட்டில் பிறந்த ஒரு சிறுவனால் நாட்டின் மிக உயரிய பொறுப்புக்கு வர முடிந்துள்ளது.  இந்த ஜனநாயகம் நாட்டின் குடிமக்களுக்கு வழங்கியுள்ள ஆற்றல் இதுதான் என்று கூறினார்.

இந்நிலையில்  தமிழக முதல்வர் ஸ்டாலின் ராம் நாத் கோவிந்த்-க்கு எழுதியுள்ள வாழ்த்து கடிதத்தில், " அன்பார்ந்த திரு. ராம் நாத் கோவிந்த் அவர்களே,இந்திய குடியரசுத் தலைவராக உங்கள் பதவி காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகஸ்ட் 2021-இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் எனது அழைப்பை ஏற்று தாங்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததை இத்தருணத்தில் நினைவு கூறுகிறேன்.நாட்டின் குடியரசுத் தலைவராக எங்கள் மாநிலத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு தங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

தங்களின் வளமான அனுபவத்தால் நாடு தொடர்ந்து பயன் பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நல்ல உடல் நலத்துடன் அமைதியான வாழ்வு அமைந்திட வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.