×

பொங்கல் பண்டிகையன்று நடைபெறும் யுஜிசி நெட் தேர்வுகளை மாற்றியமைக்க வேண்டும் - முதலமைச்சர் கடிதம்!

 

தமிழ்நாட்டில் தைப்பொங்கல் கொண்டாடும் ஜனவரி 14 உட்பட்ட நாட்களில் தேசிய தேர்வு முகமையால் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள யுஜிசி-நெட் தேர்வுகளை வேறொரு நாளுக்கு மாற்றியமைக்க கோரிக்கை விடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் கொண்டாடும் ஜனவரி 13 முதல் 16ஆம் நாள் வரை யுஜிசி-நெட் தேர்வுகளை நடத்திட தேசியத் தேர்வு முகமையால் அறிவிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து மாண்புமிகு ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்களின் உடனடி கவனத்திற்கு கொண்டுவந்து அத்தேர்வுகளை வேறொரு நாளில் மாற்றியமைக்க கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7-1-2025) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், இந்த ஆண்டு தமிழ்நாட்டின் மிக முக்கியமான பண்டிகையான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது என்றும் இந்தப் பண்டிகை தமிழ்நாட்டின் மிக முக்கியமான பண்டிகை என்றும், தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினராலும் அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது என்றும் மாண்புமிகு தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் 23.12.2024 அன்று ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பண்டிகை ஜனவரி 13 முதல் ஜனவரி 16 வரை நான்கு நாட்கள் கொண்டாடப்படுவதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பொங்கல் பண்டிகையை அனைத்து தமிழ்ச் சமூகத்தினரும் நான்கு நாட்கள் உற்சாகமாக கொண்டாடுவர் என்றும் எனவே, இந்தப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2025 ஜனவரி 14 முதல் 17 வரை அரசு விடுமுறை நாட்களாக தமிழ்நாடு அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் அறுவடைத் திருவிழாவாக கொண்டாடப்படும் பொங்கல், ஒரு பண்டிகையாக மட்டுமல்லாது ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் காட்டுவதாகவும், இந்தப் பொங்கல் பண்டிகையைப் போலவே, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.