ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியானது, மாநில அரசுகளை முடக்க பார்க்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி என்பது தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாட்டை 'மாநிலங்களின் ஒன்றியம்' என்றுதான் இந்திய அரசமைப்புச் சட்டம் வரையறுக்கிறது. மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி என்பது தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கை. அந்த முழக்கத்தை வென்றெடுக்க நீதிபதி இராஜமன்னார் குழுவைத் தலைவர் கலைஞர் அமைத்தார். அதே இலக்கில்தான் நீதியரசர் குரியன் ஜோசப்பைத் தலைவராகவும், அசோக் வர்தன் ஷெட்டி, பேராசிரியர் நாகநாதன் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குழுவை அமைத்துள்ளோம். தலைவர் கலைஞர் அவர்கள் குரல் எழுப்பிய காலத்தை விட இன்றைய காலம் மிகமிக மோசமான காலமாகும். இன்றைய ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியானது, மாநில அரசுகளை முடக்கப் பார்க்கிறது; மாநிலங்களின் மொழி, கலாசாரங்களை அழிக்கப் பார்க்கிறது. மாநிலங்களின் உரிமைகளைச் சிதைக்கப் பார்க்கிறது.
NEP ஏழை எளிய மக்களை கல்விச் சாலைகளில் இருந்து துரத்தும் கல்வி முறை. NEET நமது ஏழை கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைப்பதாக இருக்கிறது. மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தி மொழிக் கொள்கையாகவே மாற்றிவிடுவார்கள். இது இந்தி பேசாத மக்களை இந்திய நாட்டில் இரண்டாம் தர மக்களாக மாற்றும் சூழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.