‘தென்னகத்து போஸ்’ தேவர்.. நன்றியோடு நினைவுகூர்கிறேன் - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்..
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முத்துராமலிங்க தேவரின் தியாகத்தையும், தீரத்தையும், நற்பண்புகளையும் நினைவு கூர்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழா மற்றும் 60 ஆவது குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விமரிசையாகவும், மிகுந்த பாதுகாப்புடனும் நடைபெற்று வருகிறது. முன்னதாக குருபூஜை விழாவில் முதலமைச்சர் மு.கஸ்டாலின் பங்கேற்று மரியாதை செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென அவருக்கு முதுகுவலி ஏற்பட்டதால் மருத்துவர்கள் நீண்ட தூர பயணம் மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆகையால் முதலமைச்சரின் பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டது.
ஆகையால் முதல்வருக்கு பதிலாக திமுக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, அன்பில் மகேஷ், ராஜ கண்ணப்பன், தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் மாலையணிவித்தும், தேவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். இந்நிலையில் தேவர் ஜெயந்தியை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர்! ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்! “தென்னகத்து போஸ்” ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.