×

கிண்டி சிறுவர் பூங்கா  மூடல்..!!

 
கிண்டி சிறுவர் பூங்காவிலும், பறவைகள் கொத்துக் கொத்தாக இறந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கிண்டி சிறுவர் பூங்கா, 22 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த பூங்கா சமீபத்தில், 20 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, இங்கு பெரிய அளவில் கூண்டுகள் அமைத்து, அதில் வேடந்தாங்கலில் காணப்படும் பறவைகள், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. கூழைக்கடா, கரண்டிவாயன், வெள்ளை கூழைக்கடா, வக்கா, சாம்பல் நாரை, சிறிய கொக்கு உட்பட, 10 வகையிலான, 200க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன. இதில், 10க்கும் மேற்பட்ட பறவைகள், சில நாட்களுக்கு முன் இறந்ததாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் பறவைகள் கொத்துக் கொத்தாக இறப்பது தொடர்ந்து வருகிறது. இதுவரை, 50க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்துள்ளன. பறவைகள் இறப்பு குறித்து விசாரிக்க, மேலதிகாரிகள் உத்தரவிட்டதாககூறப்படுகிறது. இதன் தொடர் நடவடிக்கையாக, கிண்டி சிறுவர் பூங்கா, நேற்று மூடப்பட்டது.
வழக்கமாக, பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாய் கிழமை விடுமுறை விடப்படும். ஆனால், இந்த வாரம் செவ்வாய் கிழமை மூடப்பட்ட நிலையில், நேற்று மீண்டும், திடீரென மூடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பறவைகள் இறந்த விவகாரம் வெளியில் தெரிந்து விடக்கூடாது என, அதிகாரிகள் கவனம் செலுத்தினர். பறவை காய்ச்சல் பாதிப்பால் பறவைகள் இறந்திருக்குமோ என்ற அச்சத்தில், சிறுவர் பூங்காவை மூடும் முடிவை, அதிகாரிகள் எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, கிண்டி சிறுவர் பூங்கா அதிகாரிகள் கூறுகையில், 'பறவை காய்ச்சல் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை பணிகளுக்காக பூங்கா மூடப்பட்டுள்ளது' என்றனர்.