ப்ளீச்சிங் பவுடரைக் கொட்டி குடிநீர் தொட்டியில் தூய்மைப் பணி- குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்
பொள்ளாச்சி அருகே ஊஞ்ச வேலம்பட்டி அரசுப் பள்ளியில் ப்ளீச்சிங் பவுடர் கலந்த தண்ணீர் குடித்த 15க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
பொள்ளாச்சி அருகே ஊஞ்ச வேலம்பட்டி அரசுப் பள்ளியில் அதிகளவில் ப்ளீச்சிங் பவுடரைக் கொட்டி குடிநீர் தொட்டியில் தூய்மைப் பணி செய்யப்பட்டது. அந்த ப்ளீச்சிங் பவுடர் கலந்த தண்ணீர் குடித்த 15க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மேலும் குழந்தைகளுக்கு தொண்டை எரிச்சலாக உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. அதிகளவில் ப்ளீச்சிங் பவுடர் போட்டு கழுவப்பட்ட குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் குடித்த பிறகு உடல் உபாதை ஏற்பட்டதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி நிர்வாகத்தின் மெத்தன போக்கிற்கு பொதுமக்கள் மற்றும் பெற்றோர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றுவருகிறது.