×

காரை தடுத்து நிறுத்தியதால் தகராறு- விசிக நிர்வாகிகள், சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையே மோதல்

 

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடக்க முயன்ற விசிகவினர் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் அத்துமீறி தாக்குல் நடத்தியதில் விசிக நிர்வாகி காயமடைந்தார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விக்கிரவாண்டி, மயிலம் தொகுதி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் திலீபன் காரில் முன்னாள் சென்ற காவல்துறை வாகனத்தை தொடர்ந்து சென்று சுங்கச்சாவடியை கடக்க முயன்றார். அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் தடுப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் விசிக்காவினருக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ள கார்மேகத்தை சுங்கச்சாவடி ஊழியரான தினேஷ் தாக்கியுள்ளார்.

இதில் கார்மேகம் காயமடைந்த நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுங்கச்சாவடி அலுவலக் கண்ணாடியை சேதப்படுத்தினர். விடுதலை நிறுத்தைகள் கட்சி நிர்வாகி தாக்கப்பட்டதை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுங்கச்சாவடி முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது அங்கு வந்த விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தினகரன் போராட்டம் நடத்த முடிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று வேனில் ஏற்றி கைது செய்ய முயன்றனர். காவல்துறையினர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி விடுதலை சிறுத்தை கட்சியினர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் காவல்துறையினருடம் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விக்கிரவாண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுங்கச்சாவடி ஊழியர்கள் அத்துமீறி விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியை தாக்கிய சம்பவத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.