×

தவெக - திமுகவினர் இடையே மோதல்! வேலூரில் பரபரப்பு

 

தவெக தலைவர் விஜய்க்கு எதிராக மாணவர் சங்கம் என்ற பெயரில் திமுக நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டியதாக புகார் எழுந்த நிலையில், தவெக நிர்வாகிகள் மற்றும் போஸ்டர் ஒட்டியவர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

கடந்த சனிக்கிழமை கரூரில் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல்  மற்றும் மூச்சுத்திணறலில்  40 பேர் உயிரிழந்தனர். இதனிடையே தமிழகம் முழுவதும் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக மாணவர் சங்கம் என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள நிலையில், வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே பங்களா மேடு பகுதியில் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக  மாணவர் சங்கம் என்ற பெயரில் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட சிலர் சுவரொட்டி ஒட்டியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தவெக நிர்வாகிகள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது சுவரொட்டி ஒட்டியவர்களுக்கும் தவெக நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தவெக நிர்வாகிகளை போஸ்டர் ஒட்டியவர்கள் மற்றும் திமுகவினர் தாக்கியதாக சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர். மேலும்  சாலை மறியலில் ஈடுபட  முயன்ற  தவெகவினரை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து பேர்ணாம்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பேரணாம்பட்டு பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.