சிகரெட் பிரியர்களுக்குப் பேரிடி! பிப்.1 முதல் வரலாறு காணாத வகையில் உயர்கிறது சிகரெட் விலை..!
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அரசாணையின்படி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி சட்டத்திருத்தம் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. 2025-ஆம் ஆண்டு நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 'கலால் திருத்த மசோதா - 2025'-ன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிகரெட், சுருட்டு மற்றும் ஹூக்கா போன்ற புகையிலை பொருட்களின் விலை பிப்ரவரி முதல் கணிசமாக உயரப்போவது உறுதியாகியுள்ளது.
புதிய வரி விதிப்பின்படி, சிகரெட்டுகளின் நீளம் மற்றும் வகையைப் பொறுத்து விதிக்கப்படும் கலால் வரி பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,000 சிகரெட்டுகளுக்கு ரூ. 200 முதல் ரூ. 735 வரை வசூலிக்கப்பட்ட வரி, இனி ரூ. 2,050 முதல் அதிகபட்சமாக ரூ. 8,500 வரை வசூலிக்கப்படும். இந்த அதிரடி மாற்றத்தால் சில்லறை விற்பனையில் ஒரு சிகரெட்டின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிகரெட் மட்டுமின்றி மற்ற புகையிலை பொருட்களுக்கும் வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மெல்லும் புகையிலை (Chewing Tobacco) மீதான வரி 25 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாகவும், ஹூக்கா புகையிலை வரி 25 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக பைப் சிகரெட்டுகளுக்கான புகை கலவைகள் மீதான வரி 60 சதவீதத்திலிருந்து 325 சதவீதமாக உச்சகட்ட உயர்வைச் சந்தித்துள்ளது. இந்த வரி உயர்வு புகையிலை பயன்பாட்டைக் குறைத்து பொதுமக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.