புத்தாண்டு கொண்டாட்டம்... குழந்தைகளை அழைத்துச் செல்லக் கூடாது - உயர்நீதிமன்றம்
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளில் மதுபானம் அருந்தும் இடத்துக்கு குழந்தைகள் அழைத்துச்செல்லப்படுவதாக புகார் வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவேற்காட்டை சேர்ந்த எம்.காமேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கில், எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, மது அருந்தும் இடத்திற்கு குழந்தைகள் அழைத்துவரப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார். இந்த செயல் சட்டப்படி தவறானது என்றும், சிறார் நீதிச் சட்டத்துக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ள மனுதாரர், இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும், வாழ்க்கையை அழித்துவிடும் என்றும் வேதனை தெரிவித்துள்ளார். மது அருந்தும் இடத்தில் குழந்தைகளை அனுமதித்த நட்சத்திர விடுதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், புத்தாண்டு நெருங்கும் நிலையில் நட்சத்திர விடுதிகளில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் மது அருந்தும் இடங்களில் குழந்தைகள் கலந்துகொள்ளவில்லை என்பதை உறுதிசெய்யும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, எதிர்வரும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளில் மதுபானம் அருந்தும் இடத்துக்கு குழந்தைகள் அழைத்துச்செல்வதாக புகார்கள் வந்தால் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.