×

காரில் சிக்கிய குழந்தை: கண்ணாடியை உடைத்து மீட்ட பெற்றோர்..!

 

நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க்கில், அன்சாரி என்பவர் பணம் செலுத்திக் கொண்டிருந்தபோது அவரது சொகுசு கார் திடீரென உள்பக்கமாகத் தானாகப் பூட்டிக்கொண்டது. காருக்குள் 1 வயது குழந்தை சிக்கியதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சாவியால் திறக்க முயன்றும் பலனளிக்கவில்லை. இறுதியாக 1 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லையை சேர்ந்தவர் அன்சாரி. இவர் வண்ணாரப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் போட வந்துள்ளார். அப்போது அவரது ஒரு வயதுக் குழந்தை காருக்குள் இருந்துள்ளது. அன்சாரி காரில் இருந்து இறங்கி பெட்ரோலுக்கான பணத்தைச் செலுத்திக் கொண்டிருந்தபோது, கார் திடீரென உள்புறமாக பூட்டிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அன்சாரி, காருக்குள் சிக்கியிருந்த குழந்தையை மீட்கக் கடுமையாகப் போராடினார். காரின் சாவியை வைத்து கதவை திறக்க முயற்சி செய்ததுடன், பல்வேறு வழிகளில் காரை திறக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்காத நிலையில், காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது.

சுமார் 1 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் காரின் கதவிலிருந்த ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு, கதவு திறக்கப்பட்டது. தொடர்ந்து காருக்குள் சிக்கியிருந்த 1 வயதுக் குழந்தைப் பத்திரமாக மீட்கப்பட்டது. பெட்ரோல் நிரப்ப வந்த காருக்குள் ஒரு வயதுக் குழந்தை சிக்கிய சம்பவத்தால் நெல்லை வண்ணாரப்பேட்டை பெட்ரோல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.