முதலமைச்சர் விரைவில் வீடு திரும்புவார் - அமைச்சர் துரைமுருகன்..!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காலை அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜாவை கட்சியில் இணைக்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் , பரிசோதனைக்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால், காலை நடைபயிற்சியின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதாகவும், தேவையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதாகவும், முதலமைச்சருக்கு தேவையான மருத்துவ பரிசோதனை நடந்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து மருத்துவமனையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி , மகள் செந்தாமரை உள்ளிட்டோர் உடன் உள்ளனர். மேலும் அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்குச் சென்று முதல்வரை சந்தித்து நலம் விசாரித்தனர்.
முதல்வரை சந்தித்த பிறகு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அமைச்சர் துரைமுருகன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “முதல்வருக்கு ஒன்றும் ஆகவில்லை . அவர் நலமாக இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார். இன்று மாலையே கூட அவர் வீடு திரும்பலாம்” என்று தெரிவித்தார்.