முதல்வர் விஜய்யின் மதுரை பயணம் முழு விவரம்..!!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 11.00 மணியளவில் மதுரை விமான நிலையத்துக்கு வருகை வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பை அளிக்கும் வகையில் மதுரை விமான நிலையம், அரசு ராஜாஜி மருத்துவமனை, காந்தி அருங்காட்சியகம் மற்றும் மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் தவெக சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று நண்பகல் 12.30 மணியளவில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடைபெறும் அரசு விழாவில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார். அத்துடன், குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தையும் அணிவிக்கவுள்ளார். இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் 'தங்க மோதிரம்' வழங்கப்படுகிறது.
கடந்த ஜூன் 22- ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவர். இந்த திட்டத்திற்காக நடப்பாண்டில் ரூபாய் 755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 1.28 லட்சம் மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம், ஆழ்வார்புரம், ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகம் சுமார் ரூபாய் 10.25 கோடி செலவில் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு புனரமைக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட வரலாறு, மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு, காந்தியின் தமிழ்நாட்டு பயணம் உள்ளிட்ட தகவல்களை தொடுதிரை தொழில்நுட்பங்கள் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் புதிய காட்சியமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த காந்தி நினைவு அருங்காட்சியகத்தை இன்று மதியம் 01.00 மணியளவில் திறந்து வைக்கும் முதலமைச்சர் விஜய், அருங்காட்சியகத்தையும் பார்வையிடுகிறார். அதேபோல், அருங்காட்சியகம் நாளை முதல் மீண்டும் மக்கள் பார்வைக்காகத் திறக்கப்படவுள்ளது.
17 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த செப்.17- ஆம் தேதி அன்று உலகப் பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து மாலை 04.00 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு வருகைத் தரும் முதலமைச்சருக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பூரணக் கும்ப மரியாதை வழங்கப்படவுள்ளது.
அதைத் தொடர்ந்து, திருக்கோயிலுக்கு செல்லும் முதலமைச்சர் விஜய், மீனாட்சி அம்மனை வழிபாடு செய்கிறார். பின்னர், திருக்கோயிலைச் சுற்றிப் பார்க்கிறார். கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதமும் வழங்கப்படவுள்ளது. விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு தமிழ்நாட்டில் முதன்முறையாக செல்லும் முதல் திருக்கோயில் இது.
சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலம், கொல்லூர் மூகாம்பிகை அம்மன் திருக்கோயிலில் முதலமைச்சர் விஜய் சுவாமி தரிசனம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.