முதலமைச்சர் விஜய் தலைமையில் ஜூலை 16-ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்..!
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் வருகிற ஜூலை 16-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், தமிழக அரசின் வரவிருக்கும் நிதிநிலை அறிக்கைக்கு (பட்ஜெட்) ஒப்புதல் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க உள்ள நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான முன்மொழிவுகளுக்கும் அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், சட்டப்பேரவைத் தேர்தலின்போது அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் சிலவற்றுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து, அதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநில அரசின் வரவிருக்கும் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் முன்னேற்றம், பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்வதற்காக, முதலமைச்சர் விஜய் தலைமையில் ஜூலை 2 ஆம் தேதி முதல் துறைவாரியான ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இக்கூட்டங்கள் ஜூலை 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
பெரும்பாலான முக்கிய துறைகளுக்கான ஆய்வுக்கூட்டங்கள் முதலமைச்சர் தலைமையில் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், அந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, இறுதி முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாத நிலையில், அதுகுறித்தும் அமைச்சரவையில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என தெரிகிறது.
மேலும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், பட்ஜெட்டில் இடம்பெற உள்ள முக்கிய அம்சங்கள் குறித்தும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, ஜூலை 16ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.