தொகுதி மறுவரையறை எதிர்த்து தனித்தீர்மானம்: இன்று சட்டசபையில் முன்மொழிகிறார் முதல்வர் விஜய்..!
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவால் தமிழகத்துக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து விவாதிக்க தமிழக அரசு சார்பில் எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்களுக்கும் தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டது.
19 பேர் மட்டுமே பங்கேற்பு: இந்நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் விஜய் தலைமையில் எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தம் 57 எம்.பி.க்கள் உள்ள நிலையில், 19 பேர் மட்டுமே இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இக்கூட்டத்தை புறக்கணித்துவிட்டன.
தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ராஜ்மோகன், தலைமைச் செயலர் எம்.சாய்குமார் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறை தொடர்பாக எம்.பி.க்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் உரிமையை நிரந்தரமாக பாதுகாக்க, தமிழக சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இக்கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தின் நிறைவாக, முதல்வர் விஜய் பேசினார்.
இந்நிலையில் தொகுதி மறுவரையறை எதிர்த்து இன்று ஆக.12ம் தேதி சட்டசபையில் தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிகிறார். தற்போதுள்ள லோக்சபா எம்பிக்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.