“பேருந்தில் செல்ல வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு என முதல்வர் விஜய் சொன்னார்”- நடத்துனர் நெகிழ்ச்சி
பேருந்தில் முதல்வர் பயணம் செய்தபோது நிகழ்ந்த நெகிழ்ச்சியான தருணங்களை பேருந்து நடத்துனர் பகிர்ந்துகொண்டார்.
முதல்வரின் பிறந்தநாள் அன்று சென்னையில் புதிதாக 300 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்து தொடக்க விழாவிற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள் வரவழைக்கப்பட்டன. ஆனால், கடந்த மூன்று நாட்களாக நிகழ்ச்சி நடைபெறாததால் 300 பேருந்துகளும் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் கிட்டத்தட்ட 900 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 3 நாட்கள் உணவு மற்றும் இருப்பிட வசதி இல்லாமல் சிரமப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஒரு வழியாக சென்னை கிளாம்பாக்கத்தில் 3 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 300 புதிய பேருந்துகள், பல்வேறு தரப்பினரின் கண்டனங்களை அடுத்து முதலமைச்சர் விஜய் இன்று காலை தொடங்கிவைத்தார். அதுமட்டுமில்லாமல், பேருந்து சேவையை தொடங்கி வைத்த பின், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் பெரம்பூர் செல்லும் 29A வழித்தட புதிய பேருந்தில் பயணம் செய்தார். அப்போது சரியான சில்லறை கொடுத்து டிக்கெட் எடுத்ததுடன், நடத்துனரை அருகில் அமர சொல்லி பயணித்தார்.
இதுகுறித்து நடத்துனர் கூறுகையில், “எனது நீண்ட நாள் கனவு பேருந்தில் செல்ல வேண்டும் என்று அது இன்று நினைவாகியுள்ளது என்று முதலமைச்சர் விஜய் சொன்னார்கள். பேருந்தில் பயணித்த முதலமைச்சர் விஜய் முதல் அனைவருமே டிக்கெட் எடுத்தார்கள். நான் 12 வருசமா போக்குவரத்துத் துறையில வேலை செய்றேன், முதலமைச்சர் சார் எங்க பஸ்ல வந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, நான் அவருக்கு நன்றி சொன்னேன்” என்றார்.