☰
×

"சாலைகளில் தண்ணீர் தேங்கினால் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்"- ஆட்சியர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை 

 

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இருந்து 17 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பல மாவட்டங்களில் கடுமையான கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று 17 மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர கலந்துரையாடல் நடத்தினார். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்கள் பங்கேற்றனர்.

அப்போது முதல்வர் ஜோசப் விஜய் பேசுகையில், "மழை பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற தயார் நிலையில் இருக்க வேண்டும். நிவாரண முகாம்களில் உணவு, குடிநீர், மருந்துகள் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மின் தடை, மரங்கள் விழுதல், சாலைகளில் தண்ணீர் தேங்குதல் போன்ற புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அறிவுறுத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், வருவாய்த்துறை செயலாளர் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.