முதல்முறையாக கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுகிறார் முதல்வர் விஜய்!
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் (சி.எம். விஜய்) நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு (ஆகஸ்ட் 15, 2026), சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார்.முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் கொடியேற்றும் முதல் வரலாற்று நிகழ்வு இதுவாகும்.
ஆகஸ்ட் 15 காலை 8.45 மணிக்கு முதல்வர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். கொடியேற்றத்திற்கு முன்னதாக, காவல்துறையினரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொள்கிறார். கொடியேற்றியதைத் தொடர்ந்து, கோட்டை கொத்தளத்தில் இருந்து நாட்டு மக்களுக்குத் தனது சுதந்திர தின உரையை நிகழ்த்துகிறார். விழாவில் தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது மற்றும் நல் ஆளுமை விருதுகளை முதல்வர் விஜய் வழங்குகிறார். விழாவை முன்னிட்டு சென்னை மாநகரம் முழுவதும் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் செல்லும் வழித்தடங்கள் அனைத்தும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்களும் சென்னையில் ட்ரோன்கள் மற்றும் இதர தற்காலிக பறக்கும் பொருட்கள் பறக்கவிட முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காமராஜர் சாலை உள்ளிட்ட கோட்டையைச் சுற்றியுள்ள முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.