இந்த படிப்பிற்கு 'நீட்' தேர்வு வேண்டாமே - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்..!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "அனைத்து கால்நடை மருத்துவ கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை, பொது நுழைவுத் தேர்வின் (Common Entrance Examination) அடிப்படையில் மையப்படுத்தப்பட்ட கலந்தாய்வு முறை (Centralized Counselling Process) மூலம் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.
அதற்கு மாற்று ஏற்பாடாக, 2026-27 கல்வியாண்டு முதல் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த முடியாதபட்சத்தில், நீட் தேர்வின் தரவரிசை பட்டியலின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில், மாநிலங்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.
மேலும், இந்த முன்மொழிவு தமிழ்நாட்டிற்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். கால்நடை மருத்துவக் கல்வியானது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகளில் ஒரு தனித்துவமான இடத்தை பெற்றுள்ளது. கால்நடை மருத்துவக் கல்வி என்பது வெறும் தொழில்சார் படிப்பு மட்டுமல்ல, மாறாக, மாநிலத்தின் கால்நடை பராமரிப்பை வலுப்படுத்துவதற்கும், கால்நடைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், பால்வள மேம்பாட்டினை வலுப்படுத்துவதற்கும், லட்சக்கணக்கான கிராமப்புறக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்குமான அடித்தளம்.
12-ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கை முறையை பல தசாப்தங்களாக தமிழ்நாடு பின்பற்றி வருகிறது.
2007-2008 ஆம் கல்வியாண்டு தமிழ்நாடு அரசு, தொழிற்கல்விப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்தது. குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பின்னணியை கொண்ட பல திறமையான மாணவர்களுக்கு பெரும் தடைகளை நீட் (NEET) உள்ளிட்ட ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுகள் ஏற்படுத்துகின்றன என்பதை மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தேசிய தேர்வுகள் முகமை நீட் தேர்வுகளை நடத்துவதில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதாக இருக்காது.
பள்ளிப் படிப்பின் மூலம் வெளிப்படும் தகுதியை பிரதிபலிப்பதற்குப் பதிலாக, சிறப்புப் பயிற்சிக்கான வாய்ப்புகள், நிதி ஆதாரங்கள் மற்றும் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளில் பெறப்படும் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது என்ற எண்ணத்தை சமீபத்திய ஆண்டுகளின் அனுபவங்கள் மேலும் உறுதிப்படுத்தியுள்ளன. இத்தகைய நடைமுறையை கால்நடை மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கும் விரிவுபடுத்துவது என்பது அதைப் போன்ற பாதிப்புகளையே ஏற்படுத்தும்.
மேலும், கால்நடை மருத்துவக் கல்வியானது ஒவ்வொரு மாநிலத்தின் வேளாண் மற்றும் கிராமப்புறப் பொருளாதாரத்துடன் இயல்பாகப் பிணைக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவ வல்லுநர்களுக்கான தேவை, இத்துறையில் சேரும் மாணவர்களின் பின்புலம் மற்றும் கால்நடைத் துறையின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகள் ஆகியவை நாடு முழுவதும், மாநிலத்திற்கு மாநிலம் கணிசமாக மாறுபடுகின்றன.
இந்தச் சூழலில், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அளவுகோல்களை தீர்மானிக்கும் உரிமையை அந்தந்த மாநில அரசுகளிடமே விட்டுவிடுவது தான் சரியானதாக இருக்கும். இத்தகைய அணுகுமுறையே நமது கூட்டாட்சி அமைப்பை மதிப்பதாக அமைவதோடு, கல்வித் தரத்தை தொடர்ந்து உயர்த்தவும், தகுதியான கால்நடை மருத்துவர்கள் உருவாவதை உறுதி செய்யவும் உதவும்.
அதே வேளையில், மாநிலங்கள் தங்களது சமூக-பொருளாதார நிலைகளுக்கும் கல்வி அமைப்புகளுக்கும் ஏற்புடைய மாணவர் சேர்க்கைக் கொள்கைகளை உருவாக்கிக் கொள்ளவும் வழிவகுக்கும்.
எனவே, இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்த வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.