சென்னை சைதாப்பேட்டை சமூகநீதி விடுதியில் முதல்வர் விஜய் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீர் ஆய்வு!
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டிருந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா விடுதியான சமூகநீதி விடுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று பணிகளை முடித்து கொண்டு காரில் புறப்பட்ட முதல்-அமைச்சர் விஜய், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை செல்லுமாறு கூறினார். ஆனால், கார் சைதாப்பேட்டையை நெருங்கும்போது அங்குள்ள சமூக நீதி விடுதிக்கு செல்லுமாறு கூறினார். இதனால், கார் மாற்றுப்பாதையில் சென்றதால், பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசாரே திணறிப்போனார்கள்.
கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்த எம்.சி.ராஜா விடுதி செயல்பட்டு வருகிறது. காமராஜர் காலத்தில் இந்த விடுதி கட்டப்பட்டிருந்தாலும் கூட, கடந்த திமுக ஆட்சியில் ரூ.45 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2025ஆம் ஆண்டு திறந்து வைத்தார். இந்த நிலையில், இந்த விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களையும் அவர்களுக்கான வசதிகள் குறித்து முதல்வர் விஜய் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து அங்கு தங்கியிருக்கும் மாணவர்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.
சமூக நீதி விடுதிக்கு வந்த முதல்-அமைச்சர் விஜயை பார்த்து அங்குள்ள ஊழியர்கள் அதிர்ந்து போனார். ஒவ்வொரு இடமாக சென்று அவர் ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு வழங்கும் உணவுகள் குறித்தும் கேட்டறிந்தார். முதல்-அமைச்சர் விஜய்யின் இந்த திடீர் ஆய்வுப் பணி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் சமூகநீதி விடுதிகள் செயல்பட்டு வரும் நிலையில், அந்த விடுதிகளில் உணவு தரமாக இல்லை என்ற புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது. இந்த சூழலில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சமூகநீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
சமூகநீதி விடுதியில் ஆய்வு.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய மாணவர்கள்.. On Spot-ல் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் விஜய்!
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) July 17, 2026
Social Justice Hostel | CM Vijay Visit |#Newstamil24x7 #CMVijay #TVK #Students pic.twitter.com/wI31Eybvfi