×

பெண்களின் இருசக்கர வாகன அணிவகுப்புடன் மேடை ஏறும் முதல்வர்! - திமுக மகளிர் அணி மாநாட்டின் ஹைலைட்ஸ்..!

 

திமுக மகளிர் அணி சார்பில் டெல்டா மண்டல அளவிலான "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" மாநாடு திருச்சியில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. 15 கழக மாவட்டங்கள் மற்றும் 46 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து சுமார் 1.50 லட்சம் மகளிர் பங்கேற்கும் இந்த மாநாட்டிற்காக, 120 ஏக்கர் பரப்பளவில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநாட்டிற்கு வரும் 3,000-க்கும் மேற்பட்ட பேருந்துகளை நிறுத்த பிரத்யேக இடவசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுக்கும் தனித்தனியான அமரும் இடங்கள் ஒதுக்கப்பட்டு, அவற்றை முறைப்படுத்த டெல்டா மண்டல நிர்வாகிகள் தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் பணியில் சுமார் 250 ஆண் மற்றும் பெண் பாதுகாவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், அவசர மருத்துவத் தேவைகளுக்காக மினி கிளினிக் மற்றும் தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன.

மாநாட்டில் பங்கேற்கும் பெண்களின் நலன் கருதி, தன்னார்வலர்கள் மூலம் சுகாதார நாப்கின்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்காகப் பாலூட்டும் அறைகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளன. 400 நடமாடும் கழிவறைகள் மற்றும் தடையற்ற குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வருகை தரும் அனைவருக்கும் சிற்றுண்டித் தொகுப்புடன், மதியம் மற்றும் இரவு உணவும் வழங்கப்பட உள்ளது. மாநாட்டின் சிறப்பம்சமாக மகளிர் மட்டுமே பங்கேற்கும் பறையிசை மற்றும் சிலம்பம் போன்ற வீரக்கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டுத் திடல் முழுவதும் 54 எல்.இ.டி (LED) திரைகள் வைக்கப்பட்டு, திமுக ஆட்சியின் மகளிர் நலத் திட்டங்கள் குறித்த பதாகைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்களை, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் இருசக்கர வாகன அணிவகுப்புடன் மேடைக்கு அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், முதலமைச்சர் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டின் இறுதியில் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.