முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்..! அதிமுக-வின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி..!
ஈரோட்டில் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:ஈரோட்டுக்கு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்; திமுக அரசின் திட்டங்களால், வீட்டுக்கு ஒருவராவது பயனடைந்துள்ளனர். பெண்கள் பாதுகாப்பை பற்றி இபிஎஸ் பேச தகுதி இல்லை; அதிமுக பொல்லாத ஆட்சிக்கு, பொள்ளாச்சியே சாட்சி என தமிழகமே சொன்னது; பெண்களுக்கான பாதுகாப்பு இபிஎஸ் ஆட்சியில் கேள்விக் குறி.
நாட்டிலேயே பெண்கள் அதிகம் வேலைக்கு போகும் மாநிலம் தமிழகம். தமிழகத்தின் வளர்ச்சி இபிஎஸ்க்கு எரிச்சலை தருகிறது.அதிமுக அரசின் சாதனைகளை சொல்ல இபிஎஸ்யிடம் எதுவுமில்லை.
பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வந்துள்ளோம். 86 சதவிகித வழக்குகளில் 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளோம். இந்தியாவிலேயே அதிக பெண்கள் வேலைக்கு போகும் மாநிலம் தமிழ்நாடுதான். சட்டம் ஒழுங்கு இருப்பதால்தான் பெண்கள் வேலைக்கு போகிறார்கள்.
பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுவதற்கு பழனிசாமிக்கு அருகதை இருக்கிறதா?
அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே தெரியும். அப்பாவி பெண்களின் கதறல்கள் இன்னும் நமது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த வழக்கில் எவ்வளவு நாடகம் நடத்தினார் பழனிசாமி.
அந்த வழக்கை முறையாக நடத்தி, குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுத்தது திமுக ஆட்சிதான்.
அவர் ஆட்சியில் டிஜிபியாக இருந்தவர் பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதை பாதுகாத்தது அன்றைய முதல்வர் பழனிசாமிதான். இந்த வழக்கிலும் தண்டனை வாங்கிக் கொடுத்தது திமுக ஆட்சியில்தான்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கும், அதிமுக ஆட்சிக்கும் பெரிய வரலாறே உள்ளது. தருமபுரி பேருந்தில் மாணவிகள் எரிக்கப்பட்டது, பெண் ஐஏஎஸ் மீது ஆசிட் வீச்சு என பெரிய பட்டியலே போடலாம். ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுக்கும் சட்டத்தை திமுக இயற்றியுள்ளது" என்றார்.
மதுரை எய்ம்ஸை தவிர பாஜ சாதனை என்று சொல்ல பிரதமரிடம் ஒன்றும் இல்லை. நீட் துரோகம், மெட்ரோ துரோகம் என தேஜ கூட்டணியின் துரோகம் லிஸ்ட் நம்மிடம் உள்ளது. என்டிஏ என்னும் துரோக கூட்டணியை தமிழக மக்கள் ஏப்ரல் 23ம் தேதி நிச்சயம் தூக்கி எறிவார்கள். ஸ்டாலினின் இந்த 5 ஆண்டு கால ஆட்சியில் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருந்திருப்பீர்கள். காரணம் திராவிட மாடல் என்பது டெவலப்மெண்ட் மாடல்.
அனைத்துத் துறைகளின் வளர்ச்சியாகவும், அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றமாகவும், அனைத்து மாவட்டங்களின் முன்னேற்றமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம். மீண்டும் திராவிட மாடல் ஆட்சிக்கு தயாரா? சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் பேசியது தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.லைவ் வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்