×

முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நிலை பாதிப்பு : பிரேமலதா..!  

 

சென்னை கோயம்பேட்டில் தேமுதிக அலுவலகத்தில் அமைந்துள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் குருபூஜையாக அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அத்துடன் நூற்றுக்கணக்கான தேமுதிக நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். காலை முதல் மாலை வரை தொடர்ந்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தந்ததால் தேமுதிக அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

பின்னர் மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "கேப்டன் விஜயகாந்த் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று தமிழகம் முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் குருபூஜையில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், எல். முருகன் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் கேப்டன் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் கேப்டன் மீது தமிழக மக்கள் வைத்திருந்த அன்பு துளியும் குறையவில்லை என்பது தெரிகிறது. இது தவிர, கலை துறையை சேர்ந்த ஏராளமானோரும் அஞ்சலியை செலுத்தியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

தவெக தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுத்திருந்தோம், அவர் சமூக வலைதளம் மூலம் தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார். விஜய் ஆடியோ வெளியீட்டுக்காக மலேசியா சென்றுள்ளார். அவர் திரும்பிவிட்டாரா? என்று தெரியவில்லை. இருந்தாலும் அவர் தனது அஞ்சலியை செலுத்தி விட்டார். அதேபோன்று திருமாவளவன் வெளியூர் பயணம் சென்று இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் தொலைபேசி வாயிலாக தனது அஞ்சலியை தெரிவித்தார். திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதாக இருந்தது. பின்னர் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் தான் வந்திருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்னிடம் தெரிவித்தார்.

குருபூஜையை முன்னிட்டு அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் வந்திருப்பதால் இன்று மட்டும் தேமுதிக சார்பில் 40 ஆயிரம் தொண்டர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர தினம்தோறும் 2,000 பேருக்கும், வார கடைசியில் 5,000 பேருக்கும் தொடர்ச்சியாக உணவு வழங்கி வருகிறோம். கேப்டனின் இந்த கனவு திட்டம் தொடரும். அதுமட்டுமின்றி ஏராளமான மக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி கொடுக்கின்றனர். அவற்றையும் ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்வோம். ஜனவரி 9ம் தேதி மாநாடு நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து நான்காம் கட்ட சுற்றுப்பயணம் திட்டமிட்டுள்ளோம். அது முடிவதற்குள் கூட்டணி தொடர்பாக நல்ல முடிவுகள் வந்து சேரும். குறிப்பாக தேமுதிக இடம் பெறும் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும்" என்று தெரிவித்தார்.