×

2 நாள் பயணமாக இன்று மதுரைக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின்..

 

மதுரை மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு வளர்ச்சி பணிகளை நேரில் பார்வையிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரண்டு நாள் பயணமாக மதுரைக்குச் செல்கிறார்ர். இதற்காக  காலை 9 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வரும் அவருக்கு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் உயரதிகாரிகள் சிறப்பு வரவேற்பு அளிக்கின்றனர். இதனைத்தொடர்ந்து  கார் மூலம் அழகர்கோவில் ரோட்டில் உள்ள சுற்றுலா விருந்தினர் மாளிகைக்குச் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்தபின் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட  ஆட்சியர்கள்  மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.  அவர்களுடன் அரசின் வளர்ச்சி திட்டங்கள், மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு போன்றவற்றை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார். அதன்பின் மதுரை மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு வளர்ச்சி பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.  மறுநாள் (6-ம் தேதி) மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலக பணிகளைப் பார்வையிடும் முதலமைச்சர், பின்னர்  ஆழ்வார்புரம்-ஓபுளா படித்துறை இணைப்பு பாலத்தையும், மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் மணிமண்டபத்தையும் திறந்து வைக்கிறார்.  முதலமைச்சர்  வருகையையொட்டி மதுரையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.